நாமக்கல்: பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சிவக்குமார் என்பவரிடம் ரூ.10,000 கடனாகப் பெற்று, அந்த கடனுக்கான வட்டியை அவருடைய, இளம் வயது மகள் மூலம் செலுத்தியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சிவக்குமார் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அவரது நண்பரையும் அழைத்து வந்து அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி வீடியோ எடுத்து, இணையதளத்தில் பதிவேற்றினார்.
சிபிஎம் நிர்வாகி கொலைவழக்கு
இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் குடும்பத்தாருடன், சிபிஎம் கட்சியின் பள்ளிபாளையம் கிளைச்செயலாளர் வேலுச்சாமி, கடந்த 2010ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது அவர், மஜித் தெருவில் ஏழு பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சிவக்குமார், கணேசன், அன்பு, அருண், ராஜேந்திரன், ஆமையன், பூபதி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த வழக்கு, 17.03.2010ஆம் தேதி சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டு நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த 12 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு இன்று (மார்ச் 14) தீர்ப்பளிக்கப்பட்டது.
5 பேருக்கு இரட்டை ஆயுள்
இந்த வழக்கில் சிவக்குமார், அவரது அக்கா கணவர்கள் கணேசன், அருண், சிவக்குமாரின் அக்கா மகன் அன்பு மற்றும் ராஜேந்திரன் ஆகிய 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.20,000 அபராதமும் விதித்து நீதிபதி சசிரேகா தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சரணடைந்த ஆமையன் கொலை செய்யப்பட்ட நிலையில், ஜாமீனில் வெளிவந்த பூபதி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 5 பேரும் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மருத்துவ மாணவர்களுக்காக என்ன திட்டம்? திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கேள்வி