நாமக்கல் அடுத்துள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு ஆறு வார்டுகள் உள்ள நிலையில் இரண்டாவது வார்டு பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெறிநாய் ஒன்று அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்டவர்களை கடித்து குதறியுள்ளது.
இதனால் படுகாயமடைந்தவர்கள் எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றனர். ஆனால் வெறிநாய் கடித்ததற்கு போதுமான மருந்துகள் இல்லாததால் 10 கி.மீ., தொலைவில் உள்ள நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "இங்கு 100க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவைகளை பிடிக்க பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனும் இல்லை. கரோனா ஊரடங்கால் பேருந்து வசதிகள் இல்லாததால், சிகிச்சைக்காக 10 கி.மீ., தொலைவில் உள்ள நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்ல இயலவில்லை. இப்போதாவது எங்கள் ஊரில் கடந்த ஓராண்டாக மூடி உள்ள, துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும். மேலும் நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வரும் நாய் : வியக்கும் மக்கள்