நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், அதே பகுதியில் மளிகை கடை நடத்திவருகிறார். இவரது கடைக்கு அருகாமையில் உள்ள ஒரு வீட்டின் பின்புறத்தில் கட்டியிருந்த வலையில் ஐந்து அடி நீளமுள்ள நல்ல பாம்பு சிக்கியுள்ளது. அதனை கண்ட ராஜசேகர் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய நல்ல பாம்பை மீட்டுள்ளார்.
அப்போது, பாம்பு தனது விஷப்பல்லால் அவரது கையில் தீண்டியுள்ளது. இதில் விஷம் தலைக்கு ஏறி சிறிது நேரத்திற்குள் மயங்கி அவர் கீழே விழுந்துள்ளார். அதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
சிதம்பரம் கொண்டு செல்லும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழந்தார். வலையில் சிக்கிய பாம்பை மீட்க சென்ற இளைஞரை, மீட்கப்பட்ட பாம்பே தீண்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க...மின்சார சட்டத்தை திருத்தும் முடிவையே மத்திய அரசு கைவிட வேண்டும் - ராமதாஸ்