கரோனா தொற்றை தடுப்பதற்காக மே மூன்றாம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் கால நிர்ணயம் செய்து திறக்கப்பட்டு வருகிறது. சீர்காழி காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதும், வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர்.
தகுந்த இடைவெளியில்லாமல் மளிகைக் கடைகள், காய்கறி கடைகளில் கூட்டம் கூடுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் மூலம் அனைத்து வார்டுகளிலும் வண்ண அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் வாரத்திற்கு இரண்டு நாள்கள் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வளவு கட்டுப்பாடுகளையும் மீறி நகரில் சுற்றித்திரிபவர்களையும், கூட்டமாக சேர்ந்து விளையாடுபவர்கள், பேசிக் கொண்டிருப்பவர்களை கண்காணிக்க ட்ரோன் கேமரா மூலம் சீர்காழி நகரம் முழுவதும் கண்காணிக்கப்பட்டது. சீர்காழி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பிரதான பகுதிச் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றியவர்களை தாழ்வாக ட்ரோனை பறக்க செய்து எச்சரித்தனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் ட்ரோனை பறக்கவிட்டு கண்காணித்தனர். அதேபோல் சீர்காழி ஈசானியத் தெரு, எடமணல் கிராமப்பகுதி திடலில் கிரிக்கெட் விளையாடியவர்களை ட்ரோன் மூலம் காவலர்கள் கண்காணித்தனர். அப்போது விளையாடிய இளைஞர்கள் இதனை கண்டு மரத்தடியில் மறைந்து தப்பினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அங்குள்ள இளைஞர்கள் கல்லை கொண்டு ட்ரோன் கேமராவை தாக்கும் காட்சிகளும் அதில் பதிவானது. இது காவல் துறையினரையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதையும் படிங்க: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் துறை!