மயிலாடுதுறை: சீர்காழி அடுத்துள்ள கொள்ளிடம் ஆற்றில் ரயில் மற்றும், சாலை மார்க்கத்திற்காக, சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு இரு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலம் பழுதடைந்ததைத் தொடர்ந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் பாதையினை அகல ரயில் பாதையாக மாற்றிய சமயத்தில் அந்த பாலமும் புதிதாக சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் திருச்செந்தூர் விரைவு ரயில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் சென்றுள்ளது. அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து இளைஞர் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது ரயில் பாலத்தை கடந்த நிலையில், படியில் அமர்ந்த அந்த இளைஞரை காணவில்லை எனத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்திருக்கலாம் எனக்கருதி, சீர்காழி ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன் அங்குள்ள ரயில்வே காவலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் ரயில்வே போலீசார் தீயணைப்பு மீட்பு துறையினரின் உதவியுடன் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் ஆய்வு செய்தனர். ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால், இளைஞர் ஒருவர் படுகாயத்துடன் ஆற்றின் மணல் பரப்பில் உயிரிழந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள், ஆற்றில் இறங்கி உடலை மீட்டு பாலத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் மீட்கப்பட்ட உடலை, உடற் கூராய்விற்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த இளைஞர் திருநெல்வேலி மாவட்டம் திருவாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான அப்பாஸ் என்பதும், பெயிண்டராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.
சென்னையில் இருந்து பாபநாசம் சென்ற போதுதான், கொள்ளிடம் பாலத்தில் ரயில் செல்லும் போது படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி ஆற்றினுள் விழுந்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. சக பயணிகள் துரிதமாக செயல்பட்டு தகவல் கொடுத்ததன் மூலம், இளைஞரின் உடலை மீட்க முடிந்தாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். மேலும் பல்வேறு முறை ரயிலில் செல்லும் பயணிகளுக்கு, படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்து என எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும், அதனை பின்பற்றாததால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதாக ரயில்வே போலீசார் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: முடிவெட்டவில்லை என ஆசிரியர் திட்டியதால் 12ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. புதுக்கோட்டையில் நடந்தது என்ன?