மயிலாடுதுறை பட்டமங்கலத் தெருவில் உள்ள ஒரு தனியார் கட்டடத்தில் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்வதற்காக சாரம் அமைக்கும் பணியில் 7 பேர் ஈடுபட்டிருந்தனர். சாரம் அமைப்பதற்கு இடையூறாக இருந்த பேனரை தொழிலாளர்கள் அகற்றியபோது அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பேனரை பிடித்திருந்த கீழபட்டமங்கலத்தை சேர்ந்த பிரவீன்குமார்(25), விக்னேஷ்(25), தினகரன்(23) ஆகியோரை மின்சாரம் தாக்கியது.
இதில் பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்தார். விக்னேஷ், தினகரன் இருவரும் தூக்கி விசப்பட்டதில் லேசான காயத்துடன் தப்பினர். உடன் அருகில் இருந்தவர்கள் 3 பேரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் பிரவீன்குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உடனடியாக பிரவீனின் உடல் உடற்கூராய்வு கூடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே, பிரவீன்குமார் உயிரிழப்பிற்கு பொறுப்பேற்று தனியார் நிறுவனமும், ஒப்பந்தகாரரும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பட்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி தலைமையில் உயிரிழந்த பிரவீன்குமார் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், பொதுமக்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் மயிலாடுதுறை காவல் துறையினர், வட்டாட்சியர் ஜெனிட்டா மேரி பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நிவாரணம் பெற்றுத் தந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் 2 மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:விதிகளை மீறி பம்பர் பொருத்திய வாகனங்களுக்கு அபராதம்!