மயிலாடுதுறை திருவிழந்தூரில் அமைந்துள்ள ஸ்ரீபரிமள ரெங்கநாதர் ஆலயம், பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 5 பஞ்ச தலங்களில் ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22ஆவது திவ்ய தேசமாகும்.
இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி விழாவின் ராப்பத்து உற்சவத்தின் 3ஆம் திருநாளை முன்னிட்டு, முத்தங்கி அலங்காரத்தில் பரிமள ரெங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து, திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடப்பட்டு, படியேற்ற சேவை நடைபெற்றது. முன்னதாக, பெருமாளை நம்மாழ்வார் வழிபடும் ஐதீக விழா நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.