உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் பிரிவான வுமன்ஸ் இந்தியா மூவ்மென்ட் சார்பில் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக நாகப்பட்டினத்தில் இஸ்லாமிய பெண்கள் பேரணி மற்றும் மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
முன்னதாக நாகை அபிராமி அம்மன் சன்னதி அருகிலிருந்து பேரணி தொடங்கி, அவுரித் திடல் வரை நடைபெற்றது. பேரணியில் பங்கேற்றவர்கள், மத்திய அரசின் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கைகளில் பதாகைகள் ஏந்தியபடி முழக்கமிட்டவாறு நாகையின் முக்கிய வீதிகளின் வழியே அவுரித் திடலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களுக்கு எதிராக மகளிர் தின மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் வுமன்ஸ் இந்தியா மூவ்மென்ட் தமிழ் மாநிலத் தலைவி நஜ்மா பேகம், தமிழ் மாநில பொதுச் செயலாளர் நஜ்மா பானு உள்ளிட்ட பலர் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கண்டன உரையாற்றினர்.
மாநாட்டின் முடிவில், இந்திய மக்களை மத ரீதியாக பிரித்துப் பார்க்கும், இந்திய அரசியலமைப்புக்கு விரோதமாக இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழர்களையும் புறக்கணிக்கும் பாரபட்சமான சட்டத்தை இயற்றிய பாஜக அரசைக் கண்டித்து, மத்திய அரசு இச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங்களை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், இச்சட்டங்களுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவரும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறையைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையும் படிங்க: மனு எடுத்துட்டு வரச் சொன்னா... விஷ பாட்டிலுடன் ஆட்சியரை சந்திக்க வந்த நபர்!