மயிலாடுதுறை அருகே ஆக்கூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அசோக் (52). இவர் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் இ.கண்மணியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், 'ஆக்கூர் தெற்கு தெருவில் உள்ள காளி கோயிலுக்கு பின்புறம் உள்ள நிலத்தை தலைமுறை தலைமுறையாக நாங்கள் அனுபவித்து விவசாயம் செய்து வந்தநிலையில், அந்த நிலத்தைக் கிறிஸ்தவ நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கி மீண்டும் அதனை எங்களுக்கே விற்றது. ஆனால், அந்த நிலத்தை எங்களுக்கு கிரயம் செய்துதரப் பணம் பெற்றுக்கொண்டு பதிவு செய்ய அந்நிறுவனம் மறுத்து விட்டார்கள். இதனால், இந்தப் பிரச்னை குறித்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்து இயந்திரம் கொண்டு அனுபவத்தில் உள்ள இடத்தில் மரத்தை வெட்டினர்.
இது குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அந்நிலம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளதால் சந்திரமோகன் தரப்பினர் நிலத்தில் நுழையக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு காவல் துறையினர் அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவத்தைச் தொடர்ந்து என் குடும்பத்தினரை கிராம மக்கள் ஒன்றிணைந்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான என் தாய் அஞ்சலை (70) திடீர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து, என் தாயாரின் இறுதிச் சடங்கை செய்வதற்கு கிராம பஞ்சாயத்துத் தலைவரிடம் சென்றிருந்தேன். நிலப்பிரச்னை வழக்கை திரும்பப்பெற வேண்டும். அந்த நிலத்தை கிராமத்திற்கு வழங்கினால் அஞ்சலி இறுதிச்சடங்கில் கலந்து கொள்வோம் என்று கூறினார். இதனால், வேறுவழியின்றி தாயாரின் உடலை உறவினர்களுடன் சேர்ந்து தூக்கிக்கொண்டு போய் அடக்கம் செய்தேன்.
எனவே, எனது குடும்பத்தினரை ஊரைவிட்டு விலக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலர் இ.கண்மணி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.