மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்து இரண்டு ஆண்டுகள் நெருங்க உள்ள நிலையில், அரசு அதிகாரிகளை திமுக பிரமுகர்கள் மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆங்காங்கே வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், மயிலாடுதுறை, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் மகேஸ்வரி, கடந்த ஐந்தாம் தேதி அரசூர் கிராமத்தில் வீடு கட்டும் பணிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டதை ஆய்வு செய்வதற்காக சக ஊழியர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது அரசூரைச் சேர்ந்த திமுக வார்டு கவுன்சிலர் செல்வேந்திரன் மற்றும் அதே பகுதி சேர்ந்த பாரதிதாசன் இருவரும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ”எப்படி என்னிடம் தகவல் தெரிவிக்காமல் கணக்கெடுக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய என் பகுதிக்கு வரலாம்” என்று கூறி மகேஸ்வரி சென்ற இருசக்கர வாகனத்தை மறித்து பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.
இது குறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரி பெரம்பூர் காவல் நிலையத்தில் கடந்த 5ம் தேதி புகார் அளித்தார். அதன் பேரில் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களைக் கைது செய்யவில்லை. இந்நிலையில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரியை வழிமறித்து மிரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டு தளபதி' என கோஷம்; ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்த விஜய் ரசிகர்கள்