நாகை மாவட்டம் சீர்காழி அருகே மேலக்கொண்டத்தூர் கிராமத்தில் பாலம் இல்லாததால் இறந்தவர்களின் சடலத்தை வாய்க்காலில் இறங்கி சுமந்து செல்லும் அவல நிலை உள்ளது. இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்பவர் உடல் நிலை சரியில்லாததால் நேற்று உயிரிழந்தார். ஈமச்சடங்கு செய்ய சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு சுமந்து சென்றனர்.
சுடுகாட்டிற்கு செல்லும் பாதையின் குறுக்கில் சுமார் 10 அடி அகலம் உள்ள வெள்ளாளன் பாசனக் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாயை கடந்து செல்ல பாலம் இல்லாத காரணத்தால் ஊர் மக்கள் உடலை எரிக்கத் தேவைப்படும் மரக்கட்டைகளை தலையிலும் இறந்தவர் உடலை தோள்களிலும் சுமந்து கொண்டு அக்கால்வாயில் இறங்கி செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில் இறந்த தேவதாஸின் உடலை உறவினர்கள் வெள்ளாளன் கால்வாய் வழியாக சுமந்து சென்று எரியூட்டினர்.
இந்த சம்பவம் குறித்து ஊர்மக்கள் பேசுகையில் அடிப்படை வசதி கூட இல்லாமல் நாங்கள் தவித்து வருகிறோம். ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் ஊரில் யாராவது உயிரிழந்து விட்டால் அவர்களின் உடலை புதைக்கவோ எரிக்கவோ கொண்டு செல்வதில் தாங்கள் பெரும் அவதிக்கு உள்ளாவதாகவும் சில நேரங்களில் தண்ணீர் நிரம்பியுள்ள வாய்க்காலில் செல்லும்போது இறந்தவர் உடல் விழுந்துவிடும் சூழல் நிலவுவதாகவும் ஆகவே விரைவில் வாய்க்காலின் குறுக்கில் பாலம் அமைத்து தரவேண்டும் என்றும் நாகை மாவட்ட நிர்வாகத்துக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.