கீழ் திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழா, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இன்று (ஆகஸ்ட் 29) பக்தர்களின்றி கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக, புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியே எடுத்துவரப்பட்டு பின்னர் ஆலயம் வந்தடையும். ஆனால் இந்தாண்டு கரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக திருக்கொடி பவனியானது ஆலயத்தை மட்டும் சுற்றி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்துவைத்தார். பின்னர் கொடியேற்றம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால், கரோனா ஊரடங்கு காரணமாக இந்தாண்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பாதிரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர்.