நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா இன்று மாலை (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறுப் பகுதிகளில் இருந்தும் பங்குபெறும் இந்தத் திருவிழா, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த ஆண்டு அரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையிலும் பக்தர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டும் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது.
அரசு ஆணையை ஏற்று அருட்தந்தையர்கள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் திருவிழாவை வீட்டில் இருந்தபடியே கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 4. 30 மணியளவில் ஆலயத்தைச் சுற்றி திருக்கொடி பவனி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் திருக்கொடியை ஏற்ற உள்ளார்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்குத் தமிழ், கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழிபாட்டுச் சடங்குகள் வழக்கம்போல நடைபெறும்.
பேராலய இணையதளப் பக்கத்தில் தினசரி நிகழ்வுகளை மக்கள் கண்டுகளிக்கலாம். செப்டம்பர் 8ஆம் தேதி கூட்டுப்பாடல் திருப்பலியைத் தொடர்ந்து, கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறும்.
ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி திருவிழா, இந்த ஆண்டு மக்கள் கூட்டமின்றி நடைபெற இருப்பது இதுவே முதல்முறை.
இதையும் படிங்க... வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழாவிற்கு பக்தர்கள் வரத் தடை - தடையை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு