கரோனா தொற்று கண்டறியப்பட்ட நாள் முதல் ஒர்க் ஃப்ரம் ஹோம் (work from home) என்ற வார்த்தை பரவலாகிவிட்டது. நோய்த் தொற்றைத் தவிர்க்கவும் பணியாளர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டும், ஊழியர்களை வீடுகளிலிருந்தே வேலை செய்யும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் ஒர்க் ஃப்ரம் ஹோம் நடைமுறை அரசு அலுவலகங்களுக்கு சாத்தியமில்லை, அதுவும், நேரகாலமின்றி நேரடி மக்கள் சேவையில் உள்ள உள்ளாட்சித் துறைகளில் வாய்ப்பே இல்லை என்ற சூழலில், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் ஊழியர்களின் நலன் கருதி ஊழியர்களே ஒன்று சேர்ந்து கூட்டாஞ்சோறு போல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை சமைத்து அசத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி அலுவலகத்தில், ஆண், பெண், கர்ப்பிணி என பல்வேறு தரப்பினரும் பணி புரிந்து வருகிறார்கள். கரோனா தொற்றின்போதும்கூட மக்களுக்காக பணியாற்றும் ஊழியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி என்பது முக்கியம். அதைக்கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு சத்தான உணவுகளைக் கொடுக்க எண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் கு.குகன் 'குக் ஃப்ரம் ஆஃபிஸ்' என்னும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.
இது குறித்து செயல் அலுவலர் குகன் கூறுகையில், "சத்தான ஆரோக்கிய உணவு முறை பற்றி தெரிந்திருப்பது என்பது வேறு. அதனைக் கடைபிடிப்பது என்பது வேறு. ஒன்றைப் பற்றி தெரிந்திருப்பதால் மட்டும் அது நமக்கு பலனளித்துவிடாது. அதைக் கடைபிடித்தால் மட்டுமே பலன்பெற முடியும். ஊழியர்களுக்கு சத்தான உணவு வழங்க குக் ஃப்ரம் ஆஃபிஸ் திட்டத்தை இங்கே கடைபிடிக்கத் தொடங்கியுள்ளோம். இது அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால் களத்தில் சுழலும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
”குக் ஃப்ரம் ஆஃபிஸ் திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு காபி, டீ வழங்கப்படுவதில்லை. அதற்கு மாறாக காலை 11 மணிக்கு இஞ்சி, எலுமிச்சை, மஞ்சள் மற்றும் மிளகு கலந்த சூடான பானம், தேன் கலந்து தயாரித்து வழங்கப்படுகிறது. மாலை நான்கு மணிக்கு மஞ்சள் மிளகுப் பால் தயாரித்து பனங்கற்கண்டு கலந்து வழங்கப்படுகிறது. இதற்காக பொது மக்கள் எரிவாயு அடுப்பினை பேரூராட்சிக்கு நன்கொடையாக அளித்துள்ளனர். மதிய உணவுக்கு, ஆர்கானிக் அரிசி மண் பானையில் சமைக்கப்படுகிறது. அன்றாடம் ஒரு கீரையும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மிளகு, சீரகம், பூண்டு, ரசம் நோய் எதிர்புக்காக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவு தயாரிப்பு செலவுகள் பணியாளர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பெண் பணியாளர்கள் ஒற்றுமையாக சுழற்சி முறையில் இந்த உணவுகளை சமைக்கின்றனர். சூடான சுவையான, மனம் மணக்கும் ஆரோக்கியமான உணவு உற்சாகம் தருகிறது” என்கின்றனர் அலுவலக ஊழியர்கள்.
"எங்கள் வீட்டில் அலுவலகம் புறப்படும் அவசரத்தில் சத்தான சமையலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர மாட்டேன். ஆனால், இங்கே கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மிகவும் ஆரோக்கியமாக உணர்கிறோம்" என்கிறார் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சியின் வரித்தண்டலர் அமுதா.
’ஒர்க் ஃப்ரம் ஹோம்’ இல் கூட சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வாய்ப்பின்றி தவிக்கும் சூழலில் அலுவலக வேலைகளையும் சாதுர்யமாகக் கையாண்டு ஒற்றுமையுடன் ஊழியர்களின் நலனில் அக்கறை கொள்ளும் ’குக் ஃப்ரம் ஆஃபிஸ்’ திட்டம் ஊழியர்கள் மத்தியில் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அழிந்து வரும் தற்காப்புக் கலை: மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் 'குஸ்தி' வாத்தியார்