மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 29ஆம் தேதி குடமுழுக்கு விழா நீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டுதல்படியும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, "நீதிமன்ற உத்தரவுப்படி பக்தர்கள் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கில் சாமி தரிசனம் செய்யவும், வைத்தீஸ்வரன் கோயில் நகர் முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மக்கள் குடமுழுக்கைப் பார்க்கும் வகையில் யூ-ட்யூப், சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். கரோனா தொற்றால் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 130 பேர் மருத்துவமனையிலும் 250 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்புப் போதுமான அளவு இருப்பில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்றார்.
இவரைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியதாவது, ஏப்ரல் 28ஆம் தேதி இரவிலிருந்து பொதுமக்கள் வைத்தீஸ்வரன் கோயில் உள்ளே செல்லாமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் யாரும் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வர வேண்டாம் எனத் தெரிவித்தார்.