மயிலாடுதுறை திருஇந்தளூரில் புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் 22ஆவது ஆலயமும், பஞ்சரங்க ஆலயங்களில் ஐந்தாவது ஆலயமான ஸ்ரீபரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா 13ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பகல் பத்து உற்சவத்தின் 7ஆம் நாள் நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 9) நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, பெருமாள் உள்ளூர் அலங்காரத்தில் மகாலட்சுமி பதக்கம் மார்பில் அணிந்து, மரகத கிரீடம் தாங்கி உள் பிரகார வீதி உலா எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து திருவந்திக்காப்பு மண்டபத்திற்கு எழுந்தருளிய பெருமாளுக்குச் சிறப்புத் தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, படி ஏற்ற சேவை நடைபெற்றது. இதில், திருமங்கையாழ்வார் பாடிய 'இந்தளூர் நும்மை தொழுதோம்' எனத் தொடங்கும் 10 பாசுரங்களும் பாடப்பட்டன. ஒவ்வொரு படியாகப் பெருமாளைப் பல்லக்கில் தாலாட்டுவதுபோல் ஐந்து படிகளைக் கடந்து கோயில் கர்ப்ப கிரகத்திற்கு எழுந்தருளினார்.
கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக நிகழ்ச்சியில் பக்தர்கள் யாருக்கும் கோயிலுக்குள் அனுமதி அளிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகிகள், உபயதாரர்கள் மட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
இதையும் படிங்க: New Year 2022 Horoscope: இந்த வருடம் உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ!