நாகையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறின. இது குறித்து சம்பந்தபட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நாகை நகர காவல் ஆய்வாளர் அனந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மதுரை சென்ற தனிப்படை போலீசார், அஜித் குமார் மற்றும் விஜய் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்ததில், இவர்கள் நாகை, வெளிப்பாளையம், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் 8 செயின்பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர். தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் பாராட்டு தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஈரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் 9 சவரன் செயின் பறிப்பு!