நாகப்பட்டினம்: நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சாலை தரக்கட்டுப்பாடு ஆய்வு அலுவலராகப் பணிபுரியும் நபர், அலுவலகம் அருகிலுள்ள கோயில் பின்புறத்தில், கடந்த மார்ச் 9ஆம் தேதி அன்று, 12 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை அலுவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், வழக்குப்பதிவு செய்து ஒரு மாதம் கடந்த நிலையில், இதுநாள் வரை நெடுஞ்சாலைத்துறை அலுவலரை கைது செய்யவில்லை.
கொலை மிரட்டல்: இதனிடையே, நெடுஞ்சாலைத்துறை அலுவலரின் நெருங்கிய உறவினர்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் சென்று, வழக்கை வாபஸ் வாங்க சொல்லி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அச்சமடைந்த சிறுமியின் பெற்றோர், நெடுஞ்சாலைத்துறை அலுவலரை உடனடியாக கைது செய்யக்கோரி, நாகை மாவட்ட ஆட்சியரிடம் இன்று (ஏப். 4) புகார் அளித்தானர்.
அப்போது, பாலியல் தொல்லை கொடுத்த நெடுஞ்சாலைத்துறை அலுவலர், சிறுமியைப் புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுவதாகவும், அவர் அரசு அலுவலர் என்பதால், காவல் துறையினர் கைது செய்யத் தயங்குவதாகவும், சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், உடனடியாக அவரைக் கைது செய்து, தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலரின் கொலை மிரட்டல் காரணமாக, சிறுமியின் பள்ளி படிப்பு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
போக்சோ வழக்கில் சிக்கியுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலர் மீது, பெண்களை தாக்கியது, அரசு அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டது உள்ளிட்ட 4 வழக்குகள், வேதாரணியம் காவல் நிலையத்தில் முன்னரே நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரயில் நிலையத்தில் பெண்ணை முத்தமிட்டவருக்கு 7 ஆண்டுகள் கழித்து சிறை!