நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகத்தைப் போன்று துலா உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறும். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம்.
அதனை முன்னிட்டு, மயிலாடுதுறை சிவாலயங்களில் துலா உற்சவம் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் உற்சவம் நேற்று மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதேபோல் மயிலாடுதுறை திரு இந்தளூர் பரிமள ரெங்கநாயகி ஆலயத்தில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் 9ஆம் நாளான திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பரிமள ரெங்கநாதர் தேரில் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டன.
ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து பெருமாள் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
இதையும் படிக்க: குன்னூரில் பெய்த கனமழை - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிப்பு!