மயிலாடுதுறை: பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகனை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா பொறையார் கடைவீதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காலத்தில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்த தமிழ்நாட்டை கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சி செய்த அதிமுக அரசு தாழ்ந்த இடத்திற்கு கொண்டு சென்றது. மத்திய அரசு நிறைவேற்றிய பாதக சட்டங்களை எல்லாம் துணைநின்று நிறைவேற்றுவதற்கு அதிமுக அரசு முழுமுதற்காரணமாக இருந்துள்ளது.
மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் இணைப்பு திட்டம், பூம்புகார் - தரங்கம்பாடி சுற்றுலா தலம் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகையை அதிமுக அரசு நிறுத்திவிட்டது. காரணம் கேட்டால் முதியோர்களுக்கு வாரிசு இருந்ததால் உதவித்தொகை நிறுத்தப்பட்டதாக அதிமுக அரசு தெரிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்த உடன் முதியோர்களுக்கு உதவி தொகை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
குடும்பத் தலைவி ஒவ்வொருவருக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும். தமிழ்நாடு அரசு பேருந்துகளில் முதியவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை உயர்வு கடந்த காலங்களில் உச்சம் தொட்டுள்ளது. சமையல் எரிவாயு மட்டும் ஜனவரி முதல் மார்ச் வரை 250 ரூபாய் உயர்ந்து உள்ளது. மத்திய மாநில அரசுகளின் கலால் வரியால் இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது. பால் விலை மூன்று ரூபாய் குறைக்கப்படும்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியபோது அதிமுக அரசு வாக்களித்ததால் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை பாஜக கொண்டு வந்தபோது, அதை ஆதரித்தது அதிமுகதான். கரோனா காலத்தில் ஏழை எளியோர் பாதிக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஜூன் மூன்றாம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அன்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்" என தெரிவித்தார்.