நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகர் கூறைநாடு பகுதியில், நேற்றிரவு எட்டு மணிக்கு போக்குவரத்து காவல் துறையினர் வாகனத் தணிக்கை செய்துகொண்டிருந்தனர். அப்போது, ரயிலடியிலிருந்து மோட்டார் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று இளைஞர்களைக் காவல் துறையினர் நிறுத்தச்சொல்லியுள்ளனர். ஆனால், அந்த இளைஞர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
இதையும் படிங்க: இளைஞர்களை அடித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள்...
இதையடுத்து போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தி, தன் கையில் வைத்திருந்த லத்தியால் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த சுரேந்தர்(23); என்பவரை முதுகில் தாக்கியுள்ளார். இதனால் நிலை தடுமாறி வாகனத்தில் சென்ற மூவரும் சாலையில் விழுந்து விபத்துக்குள்ளாயினர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் கூட்டத்தைக் கலைத்தனர். பின்னர், காயமடைந்த கணேஷ்குமார், விக்னேஷ், சுரேந்தர் ஆகியோரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தனர். மேலும், அவர்கள் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்களிடம் சமரசம் பேசியதால், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை.
இருப்பினும், இச்சம்பவம் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரெத்தினம், உடனடியாகப் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மூர்த்தியை நாகை ஆயுதப்படை பிரிவுக்குப் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.