மயிலாடுதுறை: சீர்காழி அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகார் சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது. இங்குத் தமிழர்களின் வரலாற்றை நினைவுகூரும் வகையில் கண்ணகி, கோவலன் வாழ்க்கை வரலாற்றுச் சிற்பங்கள், சிலப்பதிகார கலைக்கூடம், நிலா முற்றம், நீச்சல் குளம், ஆகியவற்றுடன் நீண்ட கடற்கரையுடன் 33 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெரிய சுற்றுலாத் தலமாகும்.
இங்கு நாள்தோறும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வது வழக்கம். தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப் பயணிகள் வராததால் சுற்றுலாத் தலமே களையிழந்து காட்சியளிக்கிறது.
சிறுவர் பூங்காவில் அமைந்துள்ள சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் போதிய பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்தும், சிதைந்தும் காணப்படுகின்றன. மேலும், சிறுவர் பூங்கா வளாகம் முழுவதும் புதர் மண்டியும், கருவேல மரங்களாகக் காணப்படுகிறது.
சிறுவர் பூங்காவைச் சீரமைக்கக் கோரிக்கை
சிறுவர்களுக்கான, ஊஞ்சல், சறுக்குமரம் போன்ற விளையாட்டுப் பொருள்கள் கருவேலமரங்களால் புதைந்து, பழுதடைந்து பயனற்றுக் கிடக்கின்றன. சிறுவர் பூங்கா திறந்தே கிடப்பதால் இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சமூக விரோதிகள் பூங்கவை மது அருந்தும் கூடமாகப் பயன்படுத்திவருகின்றனர்.
மின்விளக்கு இல்லாததால் மாலை நேரங்களில் உள்ளூர்வாசிகள்கூட அப்பகுதிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பூம்புகார் சுற்றுலாத் தலத்தில் புராதன சின்னங்கள், கலைக்கூடம், அருங்காட்சியகம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வரும் நிலையில் சிறுவர் பூங்காவையும் சீரமைத்துப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் எனவும் புதுப்பிக்கும் பணிகள் மந்தமாக நடப்பதால் அதனைத் துரிதப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: ரூ.450 கோடி மதிப்பீட்டில் உருவாகும் மருத்துவ சாதனங்கள் பூங்காவிற்கு ஒன்றிய அரசு அனுமதி