சென்னையில் தற்கொலை செய்துகொண்ட ஓட்டுநர் ராஜேஷ் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரி மீது தமிழகம் முழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் ஓட்டுநர் தற்கொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் 600 க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவலர்களால் உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், தற்கொலைக்கு காரணமான காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் நாகை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால், நாகை ரயில்நிலையம், வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட இடங்களில் 1000க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாத் தளங்கள் வெறிசோடி காணப்பட்டன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் போக்குவரத்து வசதியின்றி கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.