சென்னை: தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை (ஜனவரி 14, 2025) அன்று பட்டயக் கணக்காளர் ஃபவுண்டேஷன் படிப்பின், பாடத் தேர்வுகள் நடத்தப்படும் என தேர்வு அட்டவணை வாயிலாக மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டறிந்தார். உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ICAI) மற்றும் ஒன்றிய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதினார். தற்போது, பொங்கல் அன்று வரும் ஒரு தேர்வு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜே. சூர்யா, பட்டயக் கணக்காளர் படிப்புக்கானத் தேர்வு தேதிகள் இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் (ICAI) எனும் ஒரு சுதந்திரமான சட்டப்பூர்வ அமைப்பால் இது தீர்மானிக்கப்படுகிறது; நிதி அமைச்சகத்தால் அல்ல என்று சு.வெகடேசனுக்கு பதிலளித்திருந்தார். இதை ஆதரித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுபதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது ஜனவரி 14 அன்று நடைபெறும் தேர்வு மாற்றிவைக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகத்தின் தேர்வுகளுக்கான இணை செயலாளர் ஆனந்த் குமார் சதுர்வேதி வெளியிட்டுள்ளார். ஐசிஏஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு தேர்வு மட்டுமே மாற்றப்பட்டுள்ளது எனவும், பட்டயக் கணக்காளர் இடைநிலை படிப்பின் தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில், “இது பட்டயக் கணக்காளர் தேர்வின் மறு அட்டவணை. ஜனவரி-2025 மகர சங்கராந்தி, பிஹு, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு பொதுத் தகவல் இந்த அறிக்கை வாயிலாக அறிவிக்கப்படுகிறது. இந்தியா முழுவதும், ஜனவரி 14 அன்று நடக்கவிருந்த பட்டயக் கணக்காளர்கள் ஃபவுண்டேஷன் தேர்வு, 16 ஜனவரி 2025-க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க |
மேலும், 2025 ஜனவரி 12, 16, 18, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் பட்டயக் கணக்காளர்கள் இடைநிலைத் தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது. இனிவரும் மத்திய அல்லது மாநில அரசுகளின் விடுமுறைகளை வைத்து எந்த மாற்றமும் தேர்வு அட்டவணையில் இருக்காது. இதுவே, இறுதியான தேர்வு அட்டவணையாக கருத்தில் கொள்ள வேண்டும்,” என இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
தமிழர் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த #ICAI தேர்வுகளை மாற்ற வேண்டுமென கடிதம் எழுதியிருந்தேன்.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 26, 2024
தற்போது பொங்கல் திருநாள் அன்று இருந்த தேர்வு தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது .
நன்றி ! #ICAI #Exam #Pongal #Tamil pic.twitter.com/vMMyVpfr3I
இந்த அறிவிப்பு வெளியானதைப் பகிர்ந்த மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், தனது எக்ஸ் தள பதிவின் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர், “தமிழர் திருநாள் அன்று அறிவிக்கப்பட்டிருந்த ICAI தேர்வுகளை மாற்ற வேண்டுமென கடிதம் எழுதியிருந்தேன். தற்போது பொங்கல் திருநாள் அன்று இருந்த தேர்வு தேதி மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.