கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு தளர்த்தியதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் பக்தர்களுக்கு கடந்த 9ஆம் தேதி முதல் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (செப்.27), சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கார், பேருந்துகள் மூலம் வேளாங்கண்ணி வந்தடைந்தனர்.
பேராலயம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உடல் வெப்பப் பரிசோதனை செய்த பிறகு முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே சமூக இடைவெளியைப் பின்பற்றி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். விடுதிகள் அனைத்தும் திறக்கப்பட்டு இருப்பதால் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் அங்கேயே தங்கி, வேளாங்கண்ணி கடைத்தெரு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வருகின்றனர்.
ஆனால், கடற்கரையில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால், மொட்டையடித்த பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும், கடலில் பக்தர்கள் இறங்காமல் பார்த்துக்கொள்ள கடலோர காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.