நாகை மாவட்டம் சீர்காழியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசை மணியை ஆதரித்து இன்று மாலை தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
இந்நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தேமுதிக செயலாளர் ஜலபதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேமுதிகவின் சீர்காழி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பாஸ்கர், தேமுதிக கேப்டன் மன்ற மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து தேமுதிக நிர்வாகிகள் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை செய்யும் இடத்தை பார்வையிட்டனர். அப்போது, அங்கு வந்த தேமுதிக நகர செயலாளர் செந்தில் தன்னை ஏன் கூட்டத்திற்கு அழைக்கவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த செந்தில், ஜலபதி மற்றும் பாஸ்கரனின் கார் கண்ணாடிகளை உடைத்து கேப்டன் மன்ற மாவட்ட செயலாளர் சேகரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து சேகர் சீர்காழி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செந்திலை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தேர்தல் நேரத்தில் கூட்டத்திற்கு அழைக்காததால்தான் இந்த தகராறு நடைபெற்றதா அல்லது தேர்தல் செலவுக்கு பணத்தை பங்கு போடுவதில் எழுந்த தகராறா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.