டெல்டா பகுதிகளான நாகை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 100 வேட்பாளர்களை களமிறக்கவுள்ளதாக நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று இரண்டு வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ததையடுத்து, இன்று மயிலாடுதுறை தொகுதிக்கு சட்டை அணியாமல், கையில் ஏர் கலப்பையுடன் நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த விவசாயி சாமிதுரை மனு தாக்கல் செய்ய வந்தார்.
இதனைக் கண்ட போலீஸார், சாமிதுரை மனுதாக்கல் செய்வதற்கு அனுமதிக்க மறுத்தனர். இதனால் சிறிது நேரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஏர் கலப்பையை விட்டுவிட்டு, சட்டை அணிந்து வேட்புமனுவை, மயிலாடுதுறை லோக்சபா தொகுதி உதவி தேர்தல் அலுவலர் கண்மணியிடம் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சாமிதுரை, 'டெல்டா மாவட்டங்களில் கெயில் மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனங்கள் நிலத்தடி நீரையும் விவசாயத்தையும் பாழ்படுத்துவதை கண்டித்தும் அவர்களுக்கு உடந்தையாக உள்ள அரசியல்வாதிகளை கண்டித்தும் போட்டியிடுகிறேன்' எனத் தெரிவித்தார்.