தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்குசாவடிகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதில் மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் தொகுதியில் மொத்தம் 266 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 17 வாக்குச்சாவடிகள் மட்டுமே பதட்டமான சூழல் என கணக்கிடப்பட்டுள்ளது. பதட்டமான 17 வாக்குச்சாவடிகளிலும் கட்டிட வசதி, குடிநீர் வசதி, உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் உள்ளனவா என்றும் பிரச்சனைகள் தடுக்கும் பொருட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு எத்தனை போலீசார் பணிக்கு அமர்த்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளபட்டது. தேர்தல் அன்று பிரச்சனை ஏற்படாத வகையில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தெரிவித்தார்.