நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள செருகுடி கிராமத்தை சேர்ந்தவர் அன்னபூரணி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகலை என்பவரிடம் கடந்த 2009ஆம் ஆண்டு இரண்டு ஏக்கர் நிலத்தை, ரூபாய் 2 லட்சத்து 20 ஆயிரத்திற்கு கிரையம் செய்து வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து அன்னபூரணி, அவரது கணவர் இறந்து போகவே அந்த நிலம் அவரது மகன் கார்த்திகேயனிடம் வந்துள்ளது.
தற்பொழுது அந்த நிலத்திற்கு அதிக தொகை கேட்டு மணிமேகலையின் மகன் ரவிச்சந்திரன் மற்றும் அவரது உறவினர் மணிகண்டன் உள்ளிட்டோர் கார்த்திகேயனை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கார்த்திகேயன் கடந்த 2019ஆம் ஆண்டு, நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ரவிச்சந்திரன், மணிகண்டன் உள்ளிட்டோர் கார்த்திகேயனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்துள்ளார்.
ஆனால் புகார் கொடுத்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ரவிச்சந்திரன், மணிகண்டனுக்கு உறுதுணையாக காவல் ஆய்வாளர் சந்திரா இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்னை தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த நாடார் மக்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஏபி ராஜா கூறுகையில், புதுப்பட்டினம் ஆய்வாளர் சந்திரா புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளுவதாகவும், அதனைக் கண்டித்து வருகின்ற 26ஆம் தேதி நாகை மாவட்டங்களில் உள்ள 6 ஒன்றியங்களை ஒன்றிணைத்து நாடார் மக்கள் பேரவை சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் பதநீர் இறக்குவதற்கு அரசு அனுமதி அளித்தும், காவல்துறையினர் அனுமதி வழங்குவதில்லை என்றும், பனை மரங்களை வெட்டக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் ஒரு சிலர் மரங்களை வெட்டி வருகின்றனர். பனைமரங்களை வெட்டுவோர்களின் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:பகவதி அம்மன் கோயில் வீரவாள் மாயம்: இந்து அறநிலையத்துறை மௌனம்!