மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா திருவிடைக்கழி என்ற ஊரில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த கோயில் சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரனை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற இடம் என்று தலபுராணம் கூறுகின்றது.
பண்டைய தமிழ் நூல்களில் குராவடி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த கோயில், முருகனுக்கு உரிய பாவம் கழிந்ததால் “திருவிடைக்கழி” என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் கோயிலைப் பற்றி அருணகிரிநாதரால் "திருப்புகழ்" "கந்தர் அனுபூதி" "கந்தர் அலங்காரம்" உள்ளிட்ட நூல்களில் போற்றி பாடப்பட்டுள்ளது. சேந்தனார் பெருமானால் பாடப்பட்ட "திருவிசைப்பா" “ திருப்பல்லாண்டு” ஆகிய நூல்கள் இந்த ஆலயத்தில் இருந்துதான் இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாட்டின் புகழ்பெற்ற முருகன் கோயில்களில் ஒன்றான இந்த ஆலயத்தின் குடமுழுக்கு ஆவணி மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று ஆலய திருப்பணி செய்யப்பட்டது. இதற்காக சிறப்பு யாகங்கள் வளர்க்கப்பட்டு, புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பரம்பரை அறங்காவலர் ஜெயராமன், கோயில் செயல் அலுவலர் ரம்யா, கோயில் குருக்கள் நந்தகுமார், ராஜேஷ் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம், தை மாதங்களில் இந்த கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து கொண்டாடும் திருவிழா - இதுதான் மதுரை சம்பவம்!