காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான பெண் யானை பிரக்ருதி. 16 வயதுடைய இந்த யானையை பாகன்கள் முருகேசன், மணிகண்டன் ஆகியோர் பராமரித்துவருகின்றனர். பிரக்ருதி, உள்ளூர் மக்களின் செல்லப்பிள்ளையும்கூட.
திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் சனி பகவானை தரிசனம் செய்துவிட்டு பிரக்ருதியிடம் ஆசீர்வாதம் வாங்காமல் செல்ல மாட்டார்கள். இந்த யானை நாள்தோறும் காலை, மாலை என இருவேளைகளிலும் கோயில் குளத்தில் குளிப்பது வழக்கம்.
எப்போதும் ஒரு மணி நேரத்திற்குக் குறைவாகக் குளிக்கும் பிரக்ருதி தற்போது வெயிலின் தாக்கத்தின் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாகக் குளிக்கிறது.
தன்னுடன் சரஸ்வதி தீர்த்தக் குளத்தில் இறங்கும் பிரக்ருதி வெளியே வருவதற்கு அடம்பிடிக்கிறாள் எனப் பாகன் மணிகண்டன் உற்சாகத்துடன் தெரிவிக்கிறார். குளத்திற்குள் பாகனுடன் கண்ணாமூச்சி விளையாடும் பிரக்ருதியின் குழந்தைத்தனத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என பக்தர்கள் மெய்மறந்து பேசுகிறார்கள்.