மயிலாடுதுறை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தை மாதம் முதல் நாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. உயிர் காக்க உதவும் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடப்படும். இந்த பொங்கல் நாளில், மக்கள் மாக்கோலம் இட்டு, பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்து, மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்தை புதுப்பானையில் கட்டி, புத்தரிசியிட்டு பொங்கலிடுவர்.
தங்கள் வீடுகளின் முன்பு குத்துவிளக்கு ஏற்றி பூ, பழங்கள், காய்கறிகள், கரும்பு, பொங்கல் ஆகியவை வீட்டின் வாசலில் வைத்து சூரிய பகவானுக்குத் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றிப் படையலிடுவது வழக்கம். அந்த வகையில், தை முதல் நாளான நேற்று (ஜனவரி 15) உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, திருநகரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தை இரண்டாம் நாளில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.
இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, "100 ஆண்டுகளுக்கு முன்பு தை மாதப் பிறப்புக்கு முதல் நாள் ஏற்பட்ட கலவரம் காரணமாகவும், அதனை ஒட்டி நடந்த நகை திருட்டு சம்பவம் தொடர்பாகவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர். பொங்கல் பண்டிகை என்பதால் மனிதாபிமான அடிப்படையில் திருநகரி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தினரின் ஜாமீனோடு தை 2 நாள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
அன்று முதல் இந்த கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தை இரண்டாம் நாளே பொங்கல் விழாவாகக் கொண்டாடி வருகின்றனர் என்று கூறினர். தை முதல் நாள் பொங்கலிட்டால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதால் தை 2ஆம் நாள் பொங்கல் விழாவாகக் கடந்த மூன்று தலைமுறைகளாக மக்கள் கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தனர்.
அந்த வகையில், இன்று (ஜனவரி 16) பொங்கல் கொண்டாடும் திருநகரி கிராம மக்கள் குடும்பம், குடும்பமாக தங்கள் வீடுகளின் முன்பு மறைப்பு ஏற்படுத்தி விளக்கேற்றி பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டு, பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் களைகட்டிய பொங்கல் திருவிழா.. பாரம்பரிய உடையணிந்து பொது மக்கள் பொங்கல் கொண்டாட்டம்!