நாகை: நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கராக பணியாற்றி வருபவர் நெடுமாறன். இவர், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் திருமருகல் ஊராட்சி அலுவலகத்தில் கொடுத்த 36,435 ரூபாய்க்கான காசோலையை திருத்தி 1 லட்சத்து 36,435 ரூபாயாக மாற்றி மாநில வங்கி நாகை நகர கிளையில் பணம் பெற்றுள்ளார்.
இதேபோல தொடர்ச்சியாக 7,268 ரூபாய்க்கான மற்றொரு காசோலையில் திருத்தம் செய்து 17,268 ரூபாயாக மாற்றியும் நூதன முறையில் மோசடி செய்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த திருமருகல் ஊராட்சி ஆணையர், நெடுமாறனிடம் விசாரணை நடத்தியதில் 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் காசோலையில் மோசடி செய்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஞானசெல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில், கணக்கர் நெடுமாறன் மீது திட்டச்சேரி காவல்நிலையத்தில் காசோலை மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காசோலை மோசடியில் ஈடுபட்ட கணக்கர் நெடுமாறன் தற்போது மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழிசைக்கு காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்