மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளதால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று (மே.31) காலை சீர்காழி தாலுகா, கடவாசல் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக, அவ்வழியே சென்றவர்கள் கடை விற்பனையாளருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவர் கடையின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். மேலும் உள்ளே இருந்த ரூபாய் 1 லட்சம் மதிப்புள்ள 598 மதுபாட்டில்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பின் கடையின் மேற்பார்வையாளர் நாகராஜ் கொடுத்தப் புகாரின்பேரில், புதுப்பட்டினம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடையில் பூட்டை உடைத்து உள்ளே அடையாளம் தெரியாத நபர்கள் சிசிடிவி கேமராவைத் திருப்பிவிட்டு, மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. சில நாட்களுக்கு முன் அருகேயுள்ள மாதானம் கிராமத்தில் அரசு மதுபானக்கடையை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நிலத்தகராறில் நான்கு பேர் கொலையான சம்பவம்: வைரலாகும் வீடியோ