மயிலாடுதுறை: தங்க நகை செய்து வரும் தொழிலாளி கணேஷ். இவர் மயிலாடுதுறையில் உள்ள பிரபல நகைக் கடைக்கு சென்று மூக்குத்தி வாங்கியுள்ளார். மூக்குத்திக்கான 100 மில்லி தங்கம் 450 ரூபாய் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி வரி ஆகியவை சேர்த்து 690 ரூபாய் வந்துள்ளது.
தொடர்ந்து, நகையை வாங்கிய கணேசன் தான் நகைத் தொழிலாளி என்பதால் செய்கூலி, சேதாரம் போடக்கூடாது எனத் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால், நகைக் கடை ஊழியர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு மீண்டும் கடைக்கு வந்த கணேசன், சட்டையைக் கழற்றி விட்டு வெறும் வேட்டியுடன் முக்கியக் கடைவீதியில் சாலையில் தாறுமாறாக பேசத் தொடங்கினார்.
450 ரூபாய் நகைக்கு 250 ரூபாய் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி என நகைக்கடைகாரர்கள் தனது பணத்தை கொள்ளையடிப்பதாகவும், பணத்தை மீண்டும் பெற்றுத் தரவேண்டும் என்றும் கூறி சண்டையிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, நகைக்கடை காவலாளிகள் அவரை சமாளிக்க முடியாமல் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சுமார் ஒரு மணிநேரம் நகைக்கடை வாசலில் தங்கநகை செய்யும் ஊழியர் ஒருவர் குடிபோதையில் மேற்கொண்ட அலப்பறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.