மயிலாடுதுறை: சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக கன மழை பெய்து வருகிறது நேற்று சீர்காழியில் அதிகபட்சமாக 22 சென்டிமீட்டர் மழை பதிவானது. திடீர் கனமழையால் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் சுற்றுவட்டார பகுதி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் என பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் வைத்தீஸ்வரன்கோவில் அருகே முடவன் வடிகள் வாய்க்காலில் இரு இடங்களில் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டு, மழை நீர் முழுவதுமாக விளைநிலங்களுக்குள் புகுந்து சம்பா பயிர்கள் முற்றிலும் மூழ்கியது. இதே போல் சீர்காழியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் வடிகால் மற்றும் வாய்க்கால்கள் மூலம் உடைப்பு ஏற்பட்டு நிலங்களுக்குள் மழை நீர் முழுவதுமாக உட்புகுந்தது.
இதன் காரணமாக வைத்தீஸ்வரன்கோவில், புங்கனூர் மருவத்தூர், குமாரநத்தம், பணமங்கலம், செங்கமேடு சுற்றுவட்டார பகுதி கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வடிகால் ஆறு மற்றும் வாய்க்கால்கள் முழுமையாக தூர்வாரப்படாததே, இதற்கு காரணம் என இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே உடனடியாக அனைத்து வடிகால் வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவ மழை: கோவையில் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு