கரோனா தொற்றுப் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் தொடங்கி தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால், தினந்தோறும் கோயில்களில் நித்திய பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு நேற்று (ஆக. 30) ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதில் நாளை (செப்.1) முதல் அனைத்து கோயில்களையும் பக்தர்கள் தரிசனத்திற்கு திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
இதனால் மயிலாடுதுறை இந்து சயம அறநிலைத்துறை, ஆதீனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய ஆறு தாலுக்காக்களில் உள்ள 322 பெரிய கோயில்களும், 2005 சிறிய கோயில்களும் திறக்கப்பட உள்ளன.
இதனால் அனைத்துக் கோயில்களும் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன. மேலும், கை கழுவதற்கான தண்ணீர், சானிட்டைசர், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்கான வட்டங்கள், பேரி கார்டுகள் அமைக்கும் பணிகளையும் கோயில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை, பக்தர்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து தர்மா மீட்டர் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே கோயிலின் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 36 கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது.
இந்நிலையில், ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு கோயில்கள் திறக்கப்பட உள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.