கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் அர்ப்பணிப்போடு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை, நாகூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் காலை முதல் மாலை வரை தொடர்ந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெருக் குப்பைகள் அகற்றுவதுடன், சாலையைச் சீரமைப்பது, கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட பணிகளையும் அவர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் நாகூர் புதிய பேருந்து நிலையம் அருகே பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, தூய்மைப் பணியாளர்களை நாகை சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி நேரில் சந்தித்தார்.
அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட் வழங்கிய அவர், அவர்களைப் பாராட்டியதுடன் அவர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். மேலும் அவர்களின் கோரிக்கையை ஏற்று காலணி, கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களையும் சொந்தச் செலவில் வாங்கி தருவதாக உறுதியளித்தார்.