காவிரி டெல்டா மாவட்டங்களில் விடுபட்ட 916 வருவாய் கிராமங்களுக்கும் 2019 - 20 ஆம் ஆண்டு பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்தின் சார்பாக நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 8) மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர், காவல் துறை வேண்டுகோளுக்கிணங்க தனி அலுவலர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டு தொகை வழங்காமல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான 507 வருவாய் கிராமங்களில் இதுவரை 147 கிராமங்களுக்கு மட்டுமே பயிர் காப்பீடு இன்சூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள கிராமங்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், வேளாண் இன்சூரன்ஸ் நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தகுதி நீக்கம் செய்ய வேண்டும், நீண்ட காலமாக ஓரிடத்திலேயே பணிபுரியும் வேளாண் உதவி அலுவலர்களை பணி மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.