மயிலாடுதுறை: தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 5 அரவை பருவங்களாக இயக்கப்படாமல் உள்ளன.
இந்த ஆலையில் பணிபுரிந்தவர்களை கடந்த 2017ஆம் ஆண்டு பிற கூட்டுறவு ஆலைகளுக்கு செல்ல ஆலை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் 50 விழுக்காடு ஊழியர்கள் மட்டும் பிற ஆலைகளுக்கு சென்ற நிலையில், மீதமுள்ள 50 விழுக்காடு ஊழியர்கள் இந்த ஆலையில் தற்போதும் பணி செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி தற்போது வரை ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் இந்த ஆலையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு எந்தவித பணப் பயனும், ஓய்வு ஊதியமும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த 7ஆம்தேதி ஆலையின் அனைத்து தொழிற்சங்கத்தினர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆலை நிர்வாகத்தினர் தலையிட்டு அரசின் கவனதிற்கு கொண்டு சென்று 25ஆம் தேதிக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஆலைத் தொழிலாளர்கள் மீண்டும் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.
3ஆவது நாளாக போராட்டம் தொடர்ந்து இரவு பகலாக நீடித்து வருகிறது. உணவுக்கே வழியில்லாத நிலையில் தீபாவளி பண்டிகையை தங்களால் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக அரசு தங்களுக்கு வழங்க வேண்டிய 27 மாத நிலுவை சம்பள தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் காலமானார்