மயிலாடுதுறை: தலைஞாயிறு பகுதியில் அமைந்துள்ள என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த ஐந்து அரவை பருவங்களாக இயக்கப்படாமல் உள்ளது. நிகழாண்டிலும் அரவையைத் தொடங்க எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலையில் ஆலைத் தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
2017ஆம் ஆண்டு ஆலை ஊழியர்களை பிற கூட்டுறவு ஆலைகளுக்குப் பணி மாற்றம் செய்து ஆலை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து 50 விழுக்காடு ஊழியர்கள் மட்டுமே பிற ஆலைகளுக்குச் சென்றனர். மீதமுள்ள 50 விழுக்காடு பணியாளர்கள் இந்த ஆலையிலேயே பணி செய்துவருகின்றனர்.
இந்த ஆலையிலேயே பணிபுரியும் ஊழியர்களுக்கு 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி இன்று வரை ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும் ஆலையில் பணி செய்து ஓய்வுபெற்றவர்களுக்கு எந்தவித பண பயனும், ஓய்வு ஊதியமும் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக ஆலை தொழிலாளர்கள் சர்க்கரை ஆலை வளாகத்திலேயே கஞ்சித்தொட்டி திறந்து காத்திருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆலையின் சிஐடியு சங்கச் செயலாளர் ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் ரவீந்திரன், துணைச் செயலாளர் ராமானுஜம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
இதில், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில், கடந்த 27 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், ஆலையை உடனே இயக்க வேண்டும், ஆலையில் ஓய்வுபெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படாத பணப்பயன், ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதையும் படிங்க: பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கை!