நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, பூக்காரத் தெருவைச் சேர்ந்த மதியழகன் என்பவரது மகள் மகரஜோதி (16). பதினொன்றாம் வகுப்பு படித்துவந்த இவர், நேற்று காலை தனது உறவினர் வீரமணியுடன் இருசக்கர வாகனத்தில் தெற்குப்பொய்கை நல்லூர், விச்சுமரத்தடி கிழக்குக்கடற்கரைச் சாலையில் சென்றுள்ளார்.
அப்போது, சாலையைக் கடப்பதற்கு வீரமணி முயன்றபோது, அவரது வாகனத்தின் மீது சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அதில் மகரஜோதி படுகாயம் அடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உறவினர் வீரமணி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
அதன்பின் வீரமணி இச்சம்வம் குறித்து மனஉளைச்சல் தாங்காமல் புலம்பியபடியே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தெற்கு பொய்கை நல்லூர் அருகே மண்டுவாக்கரை சவுக்குத்தோப்பில் அவர் தூக்கில் தொங்கியநிலையில் உயிரிழந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து வேளாங்கண்ணி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் கைப்பற்றபட்டது. மேலும் அவரது உடலை காவல் துறையினர் உடற்கூறாய்விற்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த வீரமணிக்கு மனைவி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசுப் பேருந்து மோதி மாணவி உயிரிழப்பு - பதற வைக்கும் சிசிடிவி காட்சி!