நாகை: மயிலாடுதுறை காவிரி இல்லத்தில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உதயநிதி ஸ்டாலின் தனது பரப்புரை பயணத்தில் 2001-இல் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்கிறார். அப்பாவுக்கு மகன் தப்பாமல் பிறந்துள்ளார் என்பதற்கு இந்த பேச்சே உதாரணம். 2021 என்பதற்கு பதிலாக 2001 என்று சிறப்பாக பேசுகிறார்.
கள்ளிமேடு அடப்பாறு ஆற்றில் 72 கதவணைகளுக்கு ஷட்டர் போடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் சேர்த்து 1,650 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீர் விவசாய நிலங்களுக்குள் புகாமலும், நன்னீர் கடலில் சென்று புகாமலும் இருக்கும் வகையில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டப்பணிகள் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாறு கோட்டத்தில் வெண்ணாறு பாயக்கூடிய ஆறுகளான வளவனாறு, அடப்பாறு, அரிச்சந்தினாறு, பாண்டவையனாறு உள்ளிட்ட ஆறுகளில் நடைபெற்று வருகிறது.
80 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன. இப்பணிகள் முடிவடையும்போது 9 மாதங்களுக்கு நன்னீர் தேக்கி வைக்கப்படும். இதனால், கடற்கரை ஓரங்களில் நிலத்தடி நீர் உப்பாக இருந்த நிலை மாறிவருகிறது. கதவணைகளில் தேக்கி வைக்கப்படும் இந்த நீரை குடிநீருக்கு பயன்படுத்துவது மட்டுமின்றி 3ஆவது போகம் விவசாயத்துக்கும் பயன்படுத்த முடியும்.
இப்படிபட்ட திட்டத்தை ஓ.எஸ்.மணியன் ரால்குட்டைக்கு பயன்படுத்துவதாக யாரோ சொல்வதை கேட்டுகொண்டு விவசாயம், ஆறு, ஆழ்கடல் பற்றி தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார் என்றால் உதயநிதி ஸ்டாலின் ஆற்றைபற்றி தெரியாமல் பேசுகிறார். அடுப்படியில் கூட மீத்தேன் எடுப்பதற்கு அனுமதி வழங்கி விவசாயிகளின் துரோகியாக ஸ்டாலின் உள்ளார்" என்றார்.
இதையும் படிங்க: காவிரிப்படுகை ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் அனுமதி -மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கண்டனம்