சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகையை முன்னிட்டும் பயங்கரவாத ஊடுருவலை கண்காணிக்கவும் வங்கக் கடலில் இந்திய கடலோரக் காவல்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், கோடியக்கரை அருகே 45 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகிக்கும் வகையில் எட்டு படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்ட இந்திய கடலோரக் காவல் படையினர், அதன் அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர்.
இதில், இலங்கையைச் சேர்ந்த 18 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து 18 பேரை இந்திய கடலோரக் காவல்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான அனக் (ANAGH) என்ற கப்பல் மூலம் காரைக்கால் தனியார் துறைமுகம் கொண்டுவரப்பட்டனர்
காரைக்கால் தனியார் துறைமுகம் அழைத்துவரப்பட்ட மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் யாழ்ப்பாணம், எழந்தீவு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட மீனவர்கள் வேதாரண்யம் கடலோரக் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இலங்கை மீனவர்கள் சென்னை முதன்மைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது.