நாகப்பட்டினம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்று அக்கரைப்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாமினை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர்:
நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 265 படுக்கை வசதிகள் உள்ளதாகவும், இதில் 190 படுக்கைகளில் ஆக்சிஜன் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் தேவைக்கேற்ப ஆக்சிஜன் தற்போது கையிருப்பில் உள்ளது எனவும், ஆக்சிஜன் இயந்திரம் பொருத்தப்படாத படுக்கைகளில் அதனை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆக்சிஜன் அளவு கணக்கீடும் 150 ஆக்சிஜன் மீட்டர் கருவி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், படிப்படியாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மேலும் வேதாரண்யத்தில் ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் தயாரிப்பகம் அமைப்பதற்கும், நாகப்பட்டினத்தில் ஒரு நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிப்பகம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கரோனா தடுப்பூசியை பொறுத்தவரை முதல் தவணை, இரண்டாம் தவணை சேர்த்து 65 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி 30 ஆயிரம் நபர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது.
தற்போது கிராமங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டு இன்றைய தினம் நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. படிப்படியாக கிராம வாரியாக முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இதையும் படிங்க:’சொமாட்டோ ஊழியர்களுக்கு தடுப்பூசி’ - நிறுவனர் தகவல்