நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவருடைய கணவர் கவிஞர் கோவிந்தராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், சுமதி சமையல் வேலை பார்த்து அதில் வரும் சொற்ப வருமானத்தில், தனது நான்கு பெண் குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த தனது மாமனாரை கவனித்து வருகிறார்.
இந்நிலையில், தனது மூத்த மகள் அன்புமணி தன் தந்தையைப் போல் பள்ளிப் படிப்பின் போது இலக்கியம் சார்ந்த பாடல், கவிதை, பேச்சு உள்பட அனைத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளார்.
மேலும், இசை திறனை வளர்க்க திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் இளங்கலை பட்டப் படிப்பை படித்துவருகிறார். இந்த சூழலில், இசை பயில கல்லூரியில் மாணவர்களை வீணை வாங்க அறிவுறுத்தியுள்ளனர்.
தனது குடும்ப வறுமை காரணமாக செய்வதறியாது தவித்துபோன அன்புமணிக்கு, தனது தந்தையின் நண்பரான கணேசன் என்பவர் மூலம் உதவி கிடைத்துள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் தமிழர்களின் மதிப்பிற்குரியவர்கள் அறக்கட்டளையிடம் அன்புமணி குறித்த விவரத்தை கணேசன் பகிர்ந்துள்ளார்.
அவரின் இசை திறனை பார்த்து வியந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான வீணையை மதிப்புக்குரியவர்கள் அறக்கட்டளையினர் மாணவிக்கு வாங்கி கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளனர்.
மேலும், தங்களது மூன்று சகோதரிகளின் படிப்பு, குடும்ப வறுமையினை போக்க அரசு மற்றும் தன்னார்வலர்களின் உதவி வேண்டும் என மாணவி அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார்.