புதுச்சேரி: நவக்கிரகங்களில் எல்லோராலும் ஒரு வித அச்சத்துடனும், பயபக்தியுடனும் பார்க்கப்படக் கூடிய கிரகம் என்றால் அது சனி கிரகம் தான். எனவே சனி கிரகத்தின் நகர்வுகளை அனைவருமே உற்று நோக்குவார்கள். கடந்த ஜனவரி மாதத்தில் சனிப்பெயர்ச்சி நடைபெற்றதாக சில ஜோதிடர்கள் கூறினாலும், சிலர் வரும் டிசம்பர் (2023) மாதத்தில் தான் சனிப்பெயர்ச்சி என கூறுகின்றனர்.
சனீஸ்வர பகவான் தனி சன்னிதி கொண்டு எழுந்தருளியிருக்கும் புதுச்சேரி மாநிலம் திருநள்ளாற்றிலும், வரும் டிசம்பர் 20ம் தேதி தான் சனிப்பெயர்ச்சி கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாலை 5:20 மணிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
சனிப்பெயர்ச்சியில் குழப்பம் ஏன்?: சனிப்பெயர்ச்சி குறித்து அறிவதில் இருக்கும் குழப்பம் ஏன் என்பதை அறிவதற்காக, காரைக்கால் தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் குருக்களான, சிவாச்சாரியாரை அணுகினோம். அவர் அளித்த விளக்கத்தில், “நவகிரகங்களுள் மெதுவாக செல்லக்கூடிய கிரகம், மற்ற கிரகங்களுள் மாறுபட்டு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சஞ்சாரம் செய்யும் மாதங்களாக, சுமார் 30 மாதங்கள் எடுத்துக் கொள்ள கூடிய கிரகமாக சனி பகவான் விளங்குகிறார்.
ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர, ஓராண்டு நேரம் எடுத்து மெதுவாக செல்லக்கூடியவராக குரு பகவான் விளங்குகிறார். ஆண்டுக்கு ஒரு முறை சஞ்சாரம் செய்யும் கிரகமாக குருபகவான் விளங்குகிறார். ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை சஞ்சாரம் செய்யும் கிரகங்களாக ராகு பகவான் மற்றும் கேது பகவான் விளங்குகிறார்.
இவ்வாறு கிரகங்களுள் மற்ற கிரகத்திற்கு இல்லாத தனிச்சிறப்பாக, சஞ்சாரக் காலத்தின் வாயிலாக கூடுதல் மாதங்கள் கோச்சார ரீதியாக ஒரு ராசியில் அமர்ந்து அருள் பாலிக்கும் கிரகம் சனிபகவான். மற்ற கிரகங்களுக்கு, இவ்வாறு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சஞ்சாரம் செய்யும் போது, மெதுவாக செல்லக்கூடிய கிரகமாக இந்த கிரகம் விளங்குவதால் "சனைச்சரண்" என்ற பெயரோடு விளங்குகிறார். சனைகி சரண் - சனைச்சரண் என பெயர் விளங்கலாயிற்று.
பஞ்சாங்கங்கள் இருவகைப்படும்:
1. திருக்கணித பஞ்சாங்கம்,
2. வாக்கிய பஞ்சாங்கம்.
திருக்கணித பஞ்சாங்கம்: திருக்கணித பஞ்சாங்கம் என்பது வான் மண்டலத்தில் கிரகங்கள் இருக்கின்ற ஸ்தானத்தை கண்களால் பார்த்து அதன் அடிப்படையில் கணிக்கப்படுவது ஆகும்.
வாக்கிய பஞ்சாங்கம்: வாக்கிய பஞ்சாங்கம் என்பது வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து வந்த ரிஷிகள் ஒன்று கூடி தங்களுக்குள் இருக்கும் கருத்துக்களை பரிமாற இயற்றிய ஸ்லோகங்களில் உள்ள கணித முறையை, அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் இன்றளவும் எழுதப்படுவது பஞ்சாங்கமாகும்.
காலமாற்றத்தினால் எவ்வித மாற்றத்திற்கும் உட்படாத, திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் விளங்குகிறது. நம் முன்னோர்களின் கருத்துக்களையும், அவர்கள் பின்பற்றிய கணித முறைகளையும், எள்ளளவும் மாறாமல் பழமையை பிரதிபலிக்கும் பஞ்சாங்கமே வாக்கிய பஞ்சாங்கம். தமிழ்நாட்டில் உள்ள திருத்தலங்களில் இறை வழிபாடுகள் யாவும் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தான் பின்பற்றப்படுகின்றன.
பொதுவாக நமது நாட்டின் தென் மாநிலம் மற்றும் தென் மாவட்டங்களில், காவிரி கரையோரம் அமைந்துள்ள பல முக்கிய ஸ்தலங்களில் இந்த வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் சனிப்பெயர்ச்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் வருகின்ற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி, சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து அவருடைய மற்றொரு வீடாகிய கும்ப ராசிக்கு மாலை 5:20 மணிக்கு சஞ்சாரம் செய்து அருள உள்ளார்.
சனிபகவானுக்கு சிறப்பு வாய்ந்த திருநள்ளாறு கோயில்களில் நடக்கும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்றளவும் வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் தான் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது கோச்சார ரீதியாக கும்ப ராசிக்கு சனீஸ்வர பகவான் பிரவேரசம் செய்கிறார்.
அந்த வகையில் மேஷ ராசி, மிதுன ராசி, தனுசு ராசி, கன்னி ராசி உள்ளிட்ட ராசிக்காரர்கள் சனீஸ்வர பகவானால் நற்பலன்களை பெறுவார்கள். மேலும் மகர ராசி, கும்ப ராசி, மீன ராசிக்காரர்களுக்கு இது ஏழரை காலமாகும். கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியின் காலமாகும். சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டக சனியின் காலமாகும்.
விருச்சக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியின் காலமாகும். ரிஷப ராசிக்கு ஜீவன சனியின் காலமாகும். துலா ராசிக்கு பஞ்சம சனியின் காலமாகும். எனவே, இந்த ராசிக்காரர்கள் திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு உரிய பூஜைகள் செய்து வழிபட்டால், நற்பண்புகளை பெற முடியும்.
இதையும் படிங்க: சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தேரோட்ட விழா; முருகனின் திருமேனி வியர்வை சிந்தும் காட்சி!