நாகை: நாகை மாவட்டம் நம்பியார் நகரில் ஆகஸ்ட் 29ஆம் தேதி சுருக்குமடி வலை ஆதரவு மீனவ பஞ்சாயத்தார் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாகை, மயிலாடுதுறை, கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 8 மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில்,1983ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை 2000ஆம் ஆண்டு நிறைவேற்றி சுருக்குமடி வலை மற்றும் 21 அம்ச சட்டதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, மீனவர்களிடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதால், இதில், தமிழ்நாடு அரசு தலையிட்டு இருதரப்பு மீனவர்களையும் அழைத்துப் பேசி சுருக்குமடி வலை தொழில் செய்ய வழிவகை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலை பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தலைமை கிராமமமாகக் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராம பஞ்சாயத்தார் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் வழங்கினர்.
மேலும், சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக உரிய முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எடுத்துக்கூறிய மீனவர்கள், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் லலிதா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: சுருக்குமடி வலை பிரச்னையை தீர்க்க அரசுக்கு உத்தரவு