அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் நாகையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக கடலோரப் பாதுகாப்புக் குழுவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சின்னசாமி தலைமையிலான காவல் துறையினர் நேற்றிரவு (ஜூன் 1) நாகை மாவட்டம் சால்ட் சாலைப் பகுதியில் உள்ள ஒரு குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 2,500 கிலோ பதப்படுத்தப்பட்ட அட்டைகள் நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு மினி லாரி மூலம் கடத்த இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, 2,500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்த காவல் துறையினர், கடத்தலில் ஈடுபட்ட நாகை சால்ட் சாலைப் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், புலியூரைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் கடல் அட்டைகள் நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. கடல் அட்டைகளை கடத்திய இருவர் மீதும் வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972இன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட கடல் உயிரினங்களை மீனவர்களோ அல்லது வியாபாரிகளோ கடத்தி விற்பனை செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எனவே இது போன்ற சட்டவிரோத செயல்களில் மீனவர்கள் ஈடுபட வேண்டாம் எனவும் கடலோரப் பாதுகாப்புக் குழுவின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சின்னசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.