பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள் புத்தகத்திலுள்ள உள்ள பாடங்களை படித்து வந்தாலும், வெளி உலகில் நடக்கும் சம்பவங்களை அனுபவரீதியாக தெரிந்துகொள்வதற்காக பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியை தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை செயல்படுத்திவருகிறது.
இதற்காக ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரும், பள்ளி நிர்வாகமும், பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியின் மூலம் விவசாயம், கிராமங்களில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறை குறித்து மாணவ -மாணவிகளை களத்திற்கு அழைத்துச் சென்று எடுத்துரைத்துவருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் , கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கலசம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள், இயற்கையுடன் ஒன்றிய மீனவர்களின் வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொள்ள, பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சியின் மூலம் நடுக்கடலுக்கு படகில் அழைத்து செல்லப்பட்டனர்.
இதற்காக தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் சார்பில் சிறப்பு அனுமதி பெறப்பட்டு, நடுக்கடலுக்கு சென்ற மாணவ - மாணவிகளுக்கு கடல் அலைகளும், படகுப் பயணமும் அவர்களை புதுவித அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனைத்தொடர்ந்து மீன் பதப்படுத்தும் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களுக்கு அங்கு மீன்கள், மீன் உணவுகள் எவ்வாறு பதப்படுத்தப்பட்டு மதிப்புக்கூட்டி விற்கப்படுகின்றன என்றும், மீன் ஊறுகாய், இறால் பொடி, மீன் பாஸ்தா தயாரிக்கும் முறைகள் குறித்தும் மீனவ பெண் தொழிலாளர்கள் குறித்தும் அவர்களுக்கு ஆசிரியர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் எடுத்துரைத்தனர்.
கடலுக்கு சென்று மீன் பிடித்து வரும் மீனவர்களின் வாழ்க்கை முறையை அறிந்துகொள்ள கடலில் பயணம் மேற்கொண்ட நாகை பள்ளி மாணவ - மாணவிகளுக்கு இதுவரை அவர்கள் கண்டிராத அனுபவத்தை ஏற்படுத்தி உள்ளதாக மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை!